

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவு சென்றார். அந்த அழகிய தீவின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். அவரது பயணத்தால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
இதனிடையே மிகவும் அழகான லட்சத்தீவுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள் என்ற கருத்துடன் டெல்லி போலீஸார் எக்ஸ் வலைதளத்தில் லட்சத்தீவு கடற்கரை படத்தைப் பதிவு செய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து டெல்லி போலீஸாரின் எக்ஸ் சமூக வலை தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நமது தீவு (லட்சத்தீவு) மிகவும் அழகானது மற்றும் நேர்த்தியானது. மன அழுத்தத்துடன் வாகனம் ஓட்ட வேண்டாம். சரியான தூக்கப் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். ஓய்வு எடுங்கள். அழகான லட்சத்தீவுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும், டெல்லி போலீஸாரின் கருத்துக்கு லைக் போட்டுள்ளனர். மேலும் சிலர் டெல்லி போலீஸாரின் கருத்து, புகைப்படத்துக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
புதிய விமான நிலையம்: தற்போது கேரளாவின் கொச்சியில் இருந்து லட்சத்தீவின் அகத்தியில் உள்ள விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் காரணங்களால் அகத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு லட்சத்தீவின் மினிக்காய் தீவில் புதிய விமான நிலையத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி ராணுவரீதியாகவும் பயன்படுத்தப்படும் என்று மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் லட்சத்தீவு சுற்றுலா துறை மிகப்பெரிய அளவில் ஊக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் லட்சத்தீவுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமம் சார்பில் லட்சத்தீவின் சுஹேலி பார், கடமத் தீவுகளில் புதிதாக ஓட்டல்களை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. சுஹேலி பார் தீவில் 60 கடற்கரை கேளிக்கை விடுதிகள், 50 தண்ணீரில் மிதக்கும் வீடுகள், கடமத் தீவில் 75 கடற்கரை கேளிக்கை விடுதிகள், 35 தண்ணீரில் மிதக்கும் வீடுகள் அமைக்கப்படும் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது. இரு ஓட்டல் களும் வரும் 2026-ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த பிரவேக் என்ற நிறுவனம் லட்சத்தீவில் சுற்றுலா தலங்களை உருவாக்கி வருகிறது. முதல்கட்டமாக அந்த நிறுவனம் சார்பில் லட்சத்தீவின் அகத்தி தீவில் 50 கூடார விடுதிகள் அமைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் பங்குச் சந்தையில் பிரவேக் நிறுவனத்தின் பங்குகள் 47 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.