

நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பான தணிக்கை அறிக்கையில் சிலரின் பெயர்களை நீக்க காங்கிரஸ் நிர்ப்பந்தம் செய்தது என்று முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஜனவரி முதல் 2013 மே வரை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக வினோத் ராய் பதவி வகித்தார். தனது பதவிக் காலத்தில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல்வேறு ஊழல் விவகாரங் களை அவர் தனது அறிக்கை களில் அம்பலப்படுத்தினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடியும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தாக்கல் செய்த அறிக்கைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
தற்போது அவர் `Not Just an Accountant' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அக்டோபரில் வெளியிடப்பட உள்ள தனது புத்தகம் குறித்து நாளிதழ் ஒன்றுக்கு வினோத் ராய் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான அறிக்கையில் சிலரின் பெயர்களை நீக்க காங்கிரஸ் நிர்ப்பந்தம் செய்தது.
இதுதொடர்பாக சில அரசியல்வாதிகள் எனது வீட்டுக்கு வந்து பேசினர். நாடாளுமன்றத்தில் பொது கணக்குக் குழு கூட்டத்தின்போது எனக்கு மிகுந்த நெருக்குதல் அளிக்கப்பட்டது. எனது சக ஊழியர்கள் மூலமாகவும் என்னோடு பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கூட்டணி தர்மத்துக்காக சில நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது என்று மன்மோகன் சிங் ஒரு பேட்டியில் கூறினார். ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யக்கூடாது. இது குறித்து புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தகம் எழுதவில்லை. எதிர்காலத்தில் மத்தியில் திறமையான ஆட்சி, நிர்வாகம் அமைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நிராகரிப்பு
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியபோது, “வினோத் ராய்க்கு நெருக்குதல் தரப்பட்டது என்றால் அப்போதே அவர் தெரிவித்திருக்கலாம், இப்போது பரபரப்புக்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்றார்.
பாஜக வரவேற்பு
பாஜக செய்தித் தொடர்பாளர் பிசாய் சோன்கர் சாஸ்திரி நிருபர்களிடம் கூறியபோது, வினோத் ராய் வீட்டுக்கு சென்று அவருக்கு நெருக்கடி கொடுத்த தூதர்கள் யார் என்பதை காங்கிரஸ் தெரியப்படுத்த வேண்டும். அந்தக் கட்சி அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.