Published : 09 Jan 2024 05:12 PM
Last Updated : 09 Jan 2024 05:12 PM
போபால்: "ஒருவர் பதவியில் இல்லை என்றால் பதாகைகளில் அவரது படம் கழுதையின் தலையிலிருந்த கொம்புகள் போல காணாமல் போய்விடும்" என்று மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
போபாலில் பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது: "பிறருக்காக உழைக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து வேலையை செய்யும்போது வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருக்கும். இப்போதும் எனக்கு போதிய கால அவகாசம் இல்லை. நான் தொடர்ச்சியாக பணி செய்து வருகிறேன்.
அரசியலில் இருந்து ஒதுங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பது நன்றாக உள்ளது. இங்கு மோடிஜி போல நாட்டுக்காகவே வாழும் தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பலர் வெறும் வண்ணங்களை மட்டும் பார்க்கிறார்கள். நீங்கள் முதல்வராக இருக்கும்போது (அவர்கள்) அய்யா உங்களுடைய பாதங்களும் கைகளும் தாமரை போலவே இருப்பதாக கூறுவார்கள். ஆனால், நீங்கள் உயர் பொறுப்பில் (முதல்வராக) இல்லாதபோது போஸ்டர், பதாகைகளில் கூட உங்களின் படம் கழுதையின் தலையிலிருந்த கொம்புகள் போல காணாமல் போய்விடும்" என்றார்.
சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் இந்த வெற்றியினைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பதிலாக மோகன் யாதவை புதிய முதல்வராக பாஜக தலைமை தேர்வு செய்தது.
நான்கு முறை மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து, தற்போது முதல்வர் பதவியை இழந்திருக்கும் சிவராஜ் சிங் சவுகான் அப்பதவி குறித்து இவ்வாறு கேலியாக பேசுவது இது முதல் முறையில்லை. சமீபத்தில் அவரது சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியவர், "எங்களின் அரசு தொடர்ந்து வேலை செய்யும், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். லாட்லி பெஹன் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள் புதிய அரசால் முன்னெடுத்துச் செல்லப்படும். உங்களுக்கு சில பெரிய குறிக்கோள்கள் இருக்கும். பல முறை மூடிசூட்டப்பட்ட பிறகு வனவாசம் போய்தான் ஆகவேண்டும். ஆனால், இது உங்களின் சில குறிக்கோள்கள் நிறைவேறுவதற்கு முன்பாக நிகழும்" என்று பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT