Published : 09 Jan 2024 01:49 PM
Last Updated : 09 Jan 2024 01:49 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க அமலாக்கத் துறையின் செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா விரைந்துள்ளார்.
அமலாக்கத்துறையின் செயல் இயக்குநர் ராகுல் நவீன் நள்ளிரவில் கொல்கத்தா சென்றுள்ளார். அவருக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காளி பகுதிக்கு விசாரணை மேற்கொள்ள சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள இதர வழக்குகளின் நிலை குறித்தும் அவர் விசாரிப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளோடு சென்று காயம்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளை சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை செயல் இயக்குநர் ராகுல் நவீன், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னணி: ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவருமான சங்கர் ஆதியாவிடம் விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை மறித்து தாக்கிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், உள்ளே இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், அவர்களின் மொபைல் போன்கள், லேப்டாப்கள், பர்ஸ் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மறுநாள் (6 ஆம் தேதி) அமலாக்கத் துறை அதிகாரிகள் சங்கர் ஆதியாவை கைது செய்தனர். சங்கர் ஆதியாவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொது விநியோக திட்டத்தில் 30 சதவீதம் ரேஷன்கள் வெளிச்சந்தைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆதியா, மேற்கு வங்கத்தின் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், தற்போதைய வனத்துறை அமைச்சருமான ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுகிறார். தற்போது திரிணமூல் காங்கிரஸின் மாவட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT