

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், திரைமறைவில் நடந்தவற்றை பட்டியலிட்டு, அத்துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் நூல் எழுதியுள்ளார். இந்நூல் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட் டில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவ தும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. அப்போது மத்திய நிலக் கரித்துறை செயலாளராக இருந்த பி.சி.பாரக், “க்ருசேடர் ஆர் கான்ஸ்பிரேடர்” என்ற பெயரில் திரைமறைவில் நடந்த விவகாரங்களை பட்டியலிட்டு நூல் எழுதியுள்ளார்.
இந்நூலை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி டெல்லியில் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பி.சி.பாரக் பேசும்போது, “நிலக்கரி ஒதுக்கீடு குறித்து நான் அளித்த பரிந்துரைகளை நிராகரித்தது, பணம் வாங்கிக் கொண்டு இயக்குநர்களை நிய மித்தது, துறைகளிடையே நடந்த ரகசிய கடிதப் போக்குவரத்து ஆகியவற்றை எழுதியுள்ளேன். என் மீது வழக்குப் பதிவு செய்ததற் காக நான் நூல் எழுதவில்லை. தூய்மையான அரசு நிர்வாகம் உருவாக வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.
இந்நூல் குறித்து முன்னாள் கேபினட் செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: பி.சி.பாரக் நேர்மையான அதிகாரி. அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நள்ளிரவில் வீட்டில் சோதனை நடத்தினர். “என்ன செய்யலாம்” என்று என்னிடம் கேட்டார்.
“உங்களை துன்புறுத்தி, நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சாட்சியம் அளிப்பதை தடுக்கவே இப்படி செய்கின்றனர்” என்றேன். அந்த கோபத்தில் அவர் பதவியில் இருந்தபோது நடந்தவற்றை புத்தகமாக எழுதி உள்ளார். அவருக்கு அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை. அரசியல் நெருக்கடிக்கு பணிந்து அவர் இந்நூலை எழுதவில்லை. அவர் அப்படிப்பட்ட நபரும் அல்ல. ஆனால், இந்த நூலை பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்கு நிச்சயம் பயன்படுத்தும். சட்டரீதியாக இந்நூல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.