பெயர் பலகையில் 60% கன்னடம் கட்டாயம்: கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல்

கன்னட அமைப்பினர் போராட்டம் | கோப்புப்படம்
கன்னட அமைப்பினர் போராட்டம் | கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் கடைகளின் பெயர்ப் பலகையில் 60 சதவீதம் க‌ன்னடத்தில் கட்டாயமாக எழுத வேண்டும் என கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடைகளை தாக்கினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த‌ பெயர் பலகைகளை அடித்து நொறுக்கியதுடன், சில இடங்களில் தார் பூசி அழித்தனர். இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், பிப்ரவரி 28ம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ''கர்நாடகாவில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகையில் 60 சதவீதம் கட்டாயம் கன்னடத்தில் எழுதி இருக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட சட்டம் திருத்தப்பட்டு அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்'' என அறிவித்தார்.

இதையடுத்து நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடத்தில் எழுத வேண்டும் என்ற (கன்னட மொழி வளர்ச்சி திருத்த சட்டம் 2024) திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை கன்னட அமைப்பினரும், இலக்கியவாதிகளும் வரவேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in