Published : 07 Jan 2024 06:25 AM
Last Updated : 07 Jan 2024 06:25 AM

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் குற்றப்பத்திரிகை: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பெயர் சேர்ப்பு

பூபேஷ் பாகெல்

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பாகெல் மீது அமலாக்கத்துறை, துணை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து,ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.

இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள்முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக 2-வதாக தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் பூபேஷ் பாகெலின் பெயரை அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு பிப்ரவரியில் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர்பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை வழங்கப்பட்டதாகாவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் அமலாக்கத் துறை 6 பேரை கைது செய்திருந்தது. ரவி உப்பாலையும் சவுரப் சந்திரகரையும் வலை வீசி தேடிவந்த நிலையில் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இந்தவழக்கு விசாரணையில் இரண்டாவதாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது சத்தீஸ்கர் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும்ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது.இரு கைகளாலும் கொள்ளை அடிக்க சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் நன்றாகப் பயன்படுத்திகொண்டது. ரூ.500 கோடி லஞ்சம்கொடுக்க சென்ற ஒருவர் கையும் களவுமாக பிடிப்பட்ட நிலையில் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என்று இப்போதாவது காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் சி.எம். என்றால் அது சீப் மினிஸ்டர் (முதல்வர்) என்று அர்த்தம் அல்ல. அது கரப்ஷன் அமைச்சர் (ஊழல் அமைச்சர்) என்றுதான் அர்த்தம். பொதுமக்களுக்கு பிரதமர் மோடி, `ரூபே கார்ட்' வழங்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ `பூபே கார்ட்` வழங்கியுள்ளது. ஊழல் கட்சி காங்கிரஸ் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x