

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்களை இந்திய கடற்படை கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டனர். அப்போது உற்சாகத்தில் அவர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்டு நன்றி தெரிவித்தனர்.
லைபீரியாவுக்கு சொந்தமான எம்வி லைலா நார்போக் என்ற சரக்குக் கப்பல், அரபிக் கடலிலில் சென்று கொண்டிருந்தது. அதில்15 இந்தியர்கள் உட்பட 21 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத 6 பேர் லைலா கப்பலில் ஏறி உள்ளதாக, கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பிரிட்டனின் யுகேஎம்டிஓ நிறுவனத்துக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இந்தத் தகவல் இந்திய கடற்படைக்கும் தெரிவிக்கப்பட்டது. அந்த கப்பல் கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அப்பகு திக்கு விரைந்தது. மேலும் இந்தியகடற்படையின் ரோந்து விமானம்,ஹெலிகாப்டர்கள், பிரடேட்டர் எம்க்யூ9பி ட்ரோன்கள் உள்ளிட்டவையும் அப்பகுதிக்கு விரைந்தன.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட லைலா சரக்குக் கப்பலுக்குள் சென்ற இந்திய கடற்படை கமாண்டோக்கள், அதிலிருந்த இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். அதேநேரம் அந்தக் கப்பலில் நடத்திய சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் இல்லை என தெரியவந்தது. மீட்கப்பட்ட இந்தியர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று உற்சாகமாக கோஷமிட்டபடி கடற்படை கமாண்டோக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் பயணித்த கப்பல்கள் குறித்து கடற்படை ஆய்வு செய்து வருகிறது.
மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கூறும்போது, “24 மணி நேரமாக சிக்கித் தவித்தோம். இந்திய கடற்படையினர் வந்து மீட்ட பிறகு நிம்மதி அடைந்தோம்” என்றார்.
இந்திய கடற்படையை நினைத்து பெருமைப்படுகிறோம் என மற் றொரு இந்தியர் தெரிவித்தார்.