Published : 07 Jan 2024 06:36 AM
Last Updated : 07 Jan 2024 06:36 AM
அயோத்தி: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி (64). இவர் வருமான வரித் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் காணிக்கையாக செலுத்த ஒரு கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளியில் தங்க பாதுகையை இவர் தயார் செய்துள்ளார்.
வனவாசத்தின்போது உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேசுவரத்துக்கு ராமர் வந்த வழியை ஆராய்ச்சி செய்து அந்தப் பாதை வழியாக தங்க பாதுகையை தலையில் சுமந்து செல்ல சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி முடிவு செய்தார்.
இதன்படி கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். ஆந்திரா,ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக சென்ற அவர் தற்போதுஉத்தர பிரதேசத்தின் சித்திரக்கூடமாவட்டத்தைச் சென்றடைந்துள்ளார். அங்கிருந்து அயோத்தி நகரம் 272 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்த 2 வாரங்களில் அயோத்தியை சென்றடைந்து ராமர் கோயிலுக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்க உள்ளார்.
இதுதொடர்பாக சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி கூறியதாவது: எனது தந்தை தீவிர அனுமன் பக்தர். அயோத்தி கர சேவையில் அவர் பங்கேற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது எனது தந்தையின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் அவரது காலத்தில் ராமர் கோயில் கனவு, நனவாகவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைதொடர்ந்து தற்போது அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இதில் எனது பங்களிப்பாக 5 வெள்ளி செங்கற்களை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினேன். வரும் 22-ம்தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்க முடிவு செய்து, ரூ.65 லட்சம்செலவில் தயார் செய்தேன்.
அந்த தங்க பாதுகையை தலையில் சுமந்து, சுமார் 8,000 கி.மீ. தொலைவு பாதயாத்திரையாக செல்கிறேன். நாள்தோறும் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொள்கிறேன். அடுத்த இரு வாரங்களுக்குள் அயோத்தியை சென்றடைவேன். அங்கு சென்ற பிறகு முதல்வர் ஆதித்யநாத்திடம் தங்க பாதுகையை சமர்ப்பிக்க உள்ளேன். எனது வாழ்நாளின் கடைசி காலத்தை ராமரோடு கழிக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்காக அயோத்தியில் ஒரு வீட்டை கட்டி தங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT