ம.பி.யில் சட்டவிரோதமாக இயங்கிய காப்பகத்தில் 26 சிறுமிகள் மாயம்

ம.பி.யில் சட்டவிரோதமாக இயங்கிய காப்பகத்தில் 26 சிறுமிகள் மாயம்
Updated on
1 min read

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த காப்பகத்தில் இருந்து 26 சிறுமிகள் மாயமானது தெரியவந்துள்ளது. சிறுமிகள் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

போபாலின் புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த அந்த சிறுமிகள் விடுதியை தேசிய குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த பதிவேட்டை சோதித்தார். அதில் 68 மாணவிகளின் பெயர் இருந்தது. ஆனால், அத்தனை பேர் அங்கில்லை. காப்பகத்தில் இருந்து 26 பேர் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காப்பகம் சட்டவிரோதமாக இயங்கியதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக கண்ணுங்கோ அவரது ட்விட்டர் பதவில், “இந்தக் காப்பகத்தை ஒரு மிஷனரி பராமரித்துவந்துள்ளது. தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். காப்பகத்தில் இருந்த சிறுமிகளில் 6 முதல் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் முதல்வர் இப்பிரச்சினையில் துரிதமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in