புனே மருத்துவமனையில் போலீஸ் காவலரை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

புனே மருத்துவமனையில் போலீஸ் காவலரை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

பூனா: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பணியில் இருந்து கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில், புனே - சாசூன் பொது மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றில், நிகழ்ச்சி முடிந்தது மேடையில் இருந்து இறங்கும் புனே கண்டோமன்ட் தொகுதி எம்எல்ஏ சுனில் காம்ப்ளே சற்று நிலை தடுமாறுகிறார். இதனால், கோபமடைந்த அவர், அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை கன்னத்தில் தாக்கியது தெரிகிறது. தாக்கப்பட்டவர் பண்ட்கார்டன் காவல் நிலைய கான்ஸ்டபிள் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.

புனே - சாசூன் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர்களில் ஒருவரான அஜித் பவார் கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தின்போது துணை முதல்வர் மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ சுனில் காம்ப்ளே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 (அரசு அதிகாரியை பணி செய்யவிடமால் தாக்குதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்எல்ஏ, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் இறங்கி வரும்போது யாரோ குறுக்கே வந்தனர். நான் அவர்களைத் தள்ளிவிட்டு முன்னேறி வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in