ஆம் ஆத்மி ஆட்சியில் கன்டெய்னர் மருத்துவமனையில் மோசடி: சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை

துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா
துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற போலி மருத்துவ பரிசோதனை மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சார்பில் கடந்த 2015-ம்ஆண்டு 'மொஹல்லா கிளினிக்' திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி கன்டெய்னர்களை இணைத்துமருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவமனைகளை எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாற்ற முடியும். கடந்த ஆகஸ்ட் மாத புள்ளிவிவரத்தின்படி டெல்லி முழுவதும் 533 'மொஹல்லா கிளினிக்குகள்' செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 212 மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.

‘மொஹல்லா கிளினிக்' மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் ஆய்வுநடத்தினர். இதில் போலி நோயாளிகள் பெயரில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலி நோயாளிகள்: முதல்கட்ட விசாரணையில் ஆயிரக்கணக்கான போலி நோயாளிகள் பெயரில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, போலி மருத்துவ பரிசோதனை குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். இதுகுறித்து டெல்லி சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ‘மொஹல்லா கிளினிக்' திட்டத்தில் தனியார் ஆய்வகங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. போலி நோயாளிகளை உருவாக்கி, அவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பெரும் தொகை மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஆவணங்களில் நோயாளிகளின் செல்போண் எண்கள் இணைக்கப்படவில்லை. பெரும்பாலான ஆவணங்களில் 99999 99999 என்ற செல்போன் எண் எழுதப்பட்டு உள்ளது.

கைது நடவடிக்கை: சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி மருத்துவ பரிசோதனை மோசடி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர்பரிந்துரைத்துள்ளார். சிபிஐ விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in