

புதுடெல்லி: எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹூவா மொய்த்ராவுக்கு, அரசு குடியிருப்பை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக, எஸ்டேட்ஸ் இயக்குநரை அணுக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேள்விஎழுப்ப, நாடாளுமன்ற இணையதளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஐ.டிமற்றும் கடவுச் சொல்லை, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் பகிர்ந்து கொண்டதாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு கைமாறாக அவர் பரிசு பொருட்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளார் எனவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் மஹூவா மொய்த்ராவின் மக்களவை எம்.பி.பதவி கடந்த மாதம் 8-ம் தேதி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், டெல்லியில் அவருக்கு அளிக்கப்பட்ட அரசு குடியிருப்பை காலி செய்யும்படி எஸ்டேட் இயக்குனரகம் கடந்த மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யும்படியும், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அரசுகுடியிருப்பில் தங்க அனுமதிக்கும்படியும் உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறியதாவது;
சில சந்தர்ப்பங்களில் விதிவிலக்காக அரசு குடியிருப்பில், குறிப்பிட்ட காலம் வரை கூடுதலாக தங்குவதற்கு அனுமதி அளிக்க விதிமுறைகள் உள்ளன. இது தொடர்பாக எஸ்டேட்ஸ் இயக்குனரகத்திடம் முறையிடுங்கள். அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.