

புதுடெல்லி: ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, பாகிஸ்தான் எல்லையில் அடுத்த 6 மாதங்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன் தடுப்பு கருவிகள் நிறுவப்படவுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் டிரோன் மூலம் கடத்துவது பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. கடந்த ஓராண்டில் பஞ்சாப்பில் 81 டிரோன்களும், ராஜஸ்தானில் 9 டிரோன்களும் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் நிதின் அகர்வால் ஏற்கெனவே கூறியிருந்தார். பாகிஸ்தான் எல்லை வழியாக கடந்தாண்டில் 300 முதல் 400 டிரோன்கள் வந்ததை காண முடிந்தது என எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. கடத்தல் காரர்கள் 750 கிராம் எடையில் உள்ள மிகச் சிறிய டிரான்களை இயக்குகின்றனர். இந்த வகை டிரோன்கள் எல்லாம் மலிவு விலையில் கிடைக்கும் சீன டிரோன்கள். இதனால் பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் டிரோன் தடுப்பு கருவிகள் அமைக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் குறித்த 3 விதமான பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பங்கள் இணைந்த டிரோன் தடுப்பு கருவிகள் மேற்கு எல்லை பகுதி முழுவதும் நிறுவப்படும்.
பஞ்சாபில் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கடத்தல்காரர்கள் தற்போது ராஜஸ்தான் வழியாக கடத்துகின்றனர். ராஜஸ்தானில் சமீபத்தில் 4 பார்சல்களை் கைப்பற்றப்பட்டன. கண்காணிப்பில் இருந்து தப்புவதற்கு, கடத்தல்காரர்கள் டிரோன்களை மிக உயரத்தில் இயக்குகின்றனர்.
ஆனால் அவற்றையும் கண்டுபிடிக்கும் வகையில் எல்லை பாதுகாப்புப் படையின் கண்காணிப்புகருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியா-மியான்மர் எல்லையில் பழங்குடியின மக்கள், எல்லையில் இருந்து 16 கி.மீ தூரம் வரை சென்று வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.
மணிப்பூர் கலவரத்துக்கும் இந்தியா-மியான்மர் எல்லை வழியாக நடைபெற்ற ஊடுருவல், ஆயுத கடத்தல்தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதனால் இந்தியா-மியான்மர் எல்லையில் அமலில் இருந்த தடையற்ற நடமாட்டத்திற்கான அனுமதி (எப்எம்ஆர்) விரைவில் ரத்து செய்யப்படும். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவர். தரைவழியாக இந்தியாவுக்குள் வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு விசா இனிமேல் கட்டாயப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்