Published : 04 Jan 2024 07:13 AM
Last Updated : 04 Jan 2024 07:13 AM

அகதிகளாக தஞ்சமடைந்தவர்களுக்காக குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயார்: மக்களவை தேர்தலுக்கு முன்பு அறிவிக்கை வெளியாகிறது

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்ட விதிகள்தயாராகிவிட்டதாகவும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், சிஏஏ சட்ட விதிமுறைகள் தயாராகி விட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பான அறிவிக்கை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிஏஏ சட்டத்தை அமல்படுத்த தனி இணையதளம் தொடங்கப்படும். அதன் மூலம்தான் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். அதில், எந்தஆண்டில் இந்தியாவில் (பயணஆவணம் இல்லாமல்) தஞ்சமடைந்தோம் என்பதை மனுதாரர்கள் குறிப்பிட வேண்டி இருக்கும். இதற்காக எந்த ஆவணமும் கேட்கப்பட மாட்டாது” என்றார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில்இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவியது. இதனால் விதிமுறைகளை உருவாக்கும் பணி தாமதமாகி வந்தது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x