

புதுடெல்லி: கடந்த மாதம் கர்னி சேனா தலைவர் கோகமெடி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 31 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2023 டிசம்பர் 5ம் தேதி ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி அவரது இல்லத்தில் மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய ரோஹித் கோதாரா என்பவர் சமூக ஊடகம் மூலமாக இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தார். தனது எதிரிகளுக்கு கோகமெடி ஆதரவு வழங்கியதால் இந்த கொலையை செய்ததாக அவர் தெரிவித்தார்.
கர்னி சேனா தலைவர் கொலையில் பெரிய சதித்திட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் என்ஐஏவை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ சந்தேக நபர்களை கைது செய்து விசாரித்ததன் அடிப்படையில் ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கர்னி சேனா தலைவர் கொலை செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை சண்டிகரில் வைத்து ஜெய்ப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
2015-ம் ஆண்டு முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள ரவுடி கும்பலின் தலைவர் பிஷ்னோய், பல்வேறு சிறைகளில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் தொடர்புகள் குறித்து வெளிநாடுகளிலும், பிஷ்னோய் கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருவது குறித்தும் என்ஐஏ ஏற்கெனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் நடத்தப்பட்ட சோதனையில் கோகமெடி கொலைக்கு பொறுப்பேற்ற ரோஹித் கோதாராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அசோக்குமார் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.