

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சிறைச்சாலைகளில் சாதிய வேறுபாடு பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையேடுகள்இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர், 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள் குறித்தும், சிறைகளுக்குள் வேலை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவது தொடர்பாகவும், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இடங்களை சாதிதான் தீர்மானிக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார். இதனை நீதிபதி அமர்வு கவனத்தில் கொண்டது.
பழங்குடி சமூகம்: மறுக்கப்பட்ட சில (டிஎன்சி) பழங்குடி சமூகங்கள், தொடர் குற்றவாளிகள் வித்தியாசமாக நடத்தப்படுவதுடன் அவர்களிடன் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து, மாநிலங்களில் இருந்து சிறைக் கையேடுகளைத் தொகுக்குமாறு வழக்கறிஞர் முரளிதரிடம் கூறிய நீதிபதிகள்,விசாரணயை நான்கு வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த சுகன்யா சாந்தா தாக்கல் செய்த இந்த பொதுநல மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் உட்பட 11 மாநிலங்கள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் தேவையான உதவிகளை வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அறிவுறுத்தியது.
தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் தவிர, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.