கார்நாடகா | ராமர் கோயிலுக்காக 31 ஆண்டுகளுக்கு முன்பு போராடிய இருவர் கைது: பாஜக போராட்டம்

ஹூப்ளி காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
ஹூப்ளி காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
Updated on
1 min read

ஹூப்ளி: ராமர் கோயிலுக்காக 31 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் மீது ஹூப்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 31 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட அந்த வழக்கில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதைக் கண்டித்து ஹூப்ளி காவல் நிலையம் முன்பாக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான தொண்டர்கள், கர்நாடக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஏற்கெனவே விரிவாக விளக்கி இருக்கிறார். நாங்கள் அப்பாவியை கைது செய்யவில்லை. நாங்கள் வெறுப்பு அரசியல் செய்யவில்லை. அமைதியை சீர்குலைத்தவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்கிறது. பாஜக ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராகவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்டத்துக்குப் புறம்பாக நடவடிக்கைகளை எடுத்தது. அதைப் போல நாங்கள் செயல்படவில்லை" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in