விவாகரத்துக்குப் பின் குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் சம உரிமை கோரும் மாநாடு

விவாகரத்துக்குப் பின் குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் சம உரிமை கோரும் மாநாடு
Updated on
1 min read

கணவன் – மனைவி விவாகரத்து செய்யும் நிலையில், குழந்தை வளர்ப்பில் தந்தையருக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த கோரி மாநாடு நடத்தவுள்ளதாக சி.ஆர்.ஐ.எஸ்.பி. (Child Rights Initiative for Shared Parenting) அமைப்பைச் சேர்ந்த குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் குமார் வி.ஜஹ்கிர்தர் கூறும்போது, “2010-ஆம் ஆண்டு மக்களவையில் திருமண சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சுதந்திர தினத்தன்று, இம்மசோதாவை அமல்படுத்த கோரி ஆக்ராவில் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளோம்.

விவாகரத்து செய்யும் தம்பதியர்களுக்கு, குழந்தை வளர்ப்பில் சமஉரிமை அளிக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். மேலும், இந்த சந்திப்பின்போது, இந்தியா முழுவதிலுமிருந்து 200 மேற்பட்ட பேர் கலந்துக்கொள்ள உள்ளனர்", என்று அவர் தெரிவித்துள்ளார்,

ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த மாநாட்டில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து முதல்முறையாக பிரிதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த பெங்களூர் குழு, கடந்த ஆறு வருடங்களாக குழந்தைகள், தந்தையர்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர். அதே வரிசையில், இவ்வருடம் ஆண்டு விழா ஒன்றை நடத்தவுள்ளது.

அதிகரிக்கும் திருமணமான ஆண்களின் தற்கொலைகள்

தேசிய குற்ற ஆவண பிரிவு தகவலின்படி, தற்கொலை செய்துக்கொண்ட திருமணமான பெண்களை (29,491) விடவும் ஆண்களின் (64,098) எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஜஹ்கிர்தர் பேசுகையில், “குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும், மனகுழப்பங்களும்தான் ஆண்கள் தற்கொலை செய்துக்கொள்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

மேலும், தங்களது பிள்ளைகளை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். ஏனெனில், அத்திருமண வாழ்க்கை சரியில்லாதப்பட்சத்தில், வரதட்சணை கேட்டதாகவும், வன்முறை செய்ததாகவும் கணவர் மீதும், அவரது குடும்பதார் மீதும் பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்”, என்று எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in