இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தகவல்

இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தகவல்
Updated on
1 min read

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அல்லது தலைவரை நியமிப்பதற்கான கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, ‘இண்டியா’ என்றபெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணிஅமைத்துள்ளன. இந்தக் கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொகுதிப் பங்கீட்டை இயன்றவரை விரைவில் முடிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். ஆனால் இதனை கார்கே ஏற்க மறுத்தார். தேர்தலுக்குப் பிறகு இதனை முடிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூட்டணி ஒருங்கிணைப்பாளர்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்,எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக இருப்பாரா என கேட்கிறீர்கள்.இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அல்லது தலைவரை நியமிப்பதற்கான எந்தக் கூட்டமும் சமீபத்தில் நடத்தப்படவில்லை. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் கூற இதற்கான பரிந்துரை எதுவும் வரவில்லை. இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசும்போது, “நாம் ஒரு முகத்தை முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த தலைவர்இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அல்லது தலைவராக செயல்பட வேண்டும்” என விருப்பம் தெரிவித்தார். இவ்வாறு சஞ்சய்ராவத் கூறினார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வழிநடத்த சாரதி (தேரோட்டி) ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே) அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா' கடந்த மாதம் பரிந்துரைத்தது. இண்டியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டுமானால் அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in