அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரர் இக்பால் அன்சாரி பிரதமர் மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்பு

அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரர் இக்பால் அன்சாரி பிரதமர் மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்பு
Updated on
1 min read

அயோத்தி: அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்றார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அங்கு சென்றார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'அயோத்தி தாம்' ரயில் நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் ஊர்வலமாக சென்றார்.

காரின் பக்கவாட்டில் நின்றபடி சென்ற அவருடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்கள் மீது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். ஊர்வலத்தின்போது, பாஞ்சி தோலா என்ற இடத்தில் பிரதமர் மோடியின் கார் சென்றபோது இக்பால் அன்சாரி ரோஜா இதழ் களை தூவி வரவேற்றார்.

இதுகுறித்து இக்பால் அன்சாரி கூறும்போது, “பிரதமர் மோடி நம் இடத்துக்கு வந்துள்ளார். அவர் நம்முடைய விருந்தினர் மட்டுமல்லாது, நம்முடைய பிரதமர் ஆவார். அந்த வகையில், எங்கள் வீட்டுக்கு முன்பு வந்த அவர் மீது மலர் தூவி வரவேற்றேன். அப்போது என் குடும்பத்தினரும் இருந்தனர்” என்றார்.

ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி நிலப் பிரச்சினை வழக்கில் முஸ்லிம்தரப்பு மனுதாரராக இருந்தவர்தான் இக்பால் அன்சாரி. உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை போடுவதற்கான முதல் அழைப்பிதழ் இக்பாலுக்குதான் வழங்கப்பட்டது.

இக்பாலின் தந்தை ஹஷிம் அன்சாரி ராம ஜென்மபூமி வழக்கின் மனுதாரராக இருந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது 95-வது வயதில் காலமானார். இதையடுத்து, அந்த வழக்கை இக்பால் அன்சாரி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in