Last Updated : 27 Jan, 2018 09:01 AM

 

Published : 27 Jan 2018 09:01 AM
Last Updated : 27 Jan 2018 09:01 AM

நாதுராமுடன் மற்றொரு முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் கைது

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் பக்தாராம் என்ற மற்றொரு முக்கிய குற்றவாளியும் ராஜஸ்தானில் சென்னை போலீஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 14-ம் தேதி சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நாதுராமுடன் மற்றொரு முக்கிய குற்றவாளியும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர், ராஜஸ்தானின் பாலி மாவட்டம், ஜெய்தாரன் அருகில் உள்ள மூர்காசனி என்ற கிராமத்தைச் சேர்ந்த பக்தாராம் குஜ்ஜர் எனத் தெரியவந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் சென்றிருந்த சென்னை போலீஸார் பக்தாராமை ஜெய்தாரனில் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையே, ஜெய்தாரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி நாதுராம், ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது கூட்டாளி தினேஷ் ஜாட் ஆகியோரையும் சென்னை போலீஸார் கைது செய்து, முறையே ஜெய்தாரன் மற்றும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் பக்தாராம், நாதுராம், தினேஷ் ஜாட் ஆகிய மூவருடன் தமிழக போலீஸார் நேற்று அதிகாலையில் சென்னை சென்றடைந்தனர்.

தினேஷ் ஜாட் கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஜோத்பூரின் ஷிகார்கர் பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். இவர் மீது ஜோத்பூரின் பிலாடா காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்கு பதிவாகியுள்ளது.

நாதுராமின் நண்பரான பக்தாராம், கொள்ளையடிக்க நோட்டம் பார்ப்பதில் வல்லவர் எனக் கூறப்படுகிறது. கொளத்தூரில் முகேஷ்குமார் ஜெயின் என்பவருக்கு சொந்தமான மகாலட்சுமி நகைக்கடையை, கொள்ளைக்கு முன் பல நாட்களாக பக்தாராம் கண்காணித்துள்ளார். பிறகு ஜெய்தாரனில் இருந்த நாதுராமிற்கு போன் செய்து அவரை சென்னை வரவழைத்துள்ளார். தினேஷ் ஜாட்டுடன் சென்னை வந்த நாதுராமிற்கு பக்தாராம் கொள்ளைக்கானத் திட்டம் வகுத்து கொடுத்து, கொள்ளையிலும் உதவியுள்ளார். மகாலட்சுமி நகைக்கடையில் திருடப்பட்ட மூன்றரை கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியில் பக்தாராமிற்கு சரிபாதி தருவதாக நாதுராம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவ்வாறு தராமல் நாதுராம் குறைவாக கொடுத்ததால் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுவே அனைவரும் போலீஸில் சிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஜெய்தாரன் காவல் துறை வட்டாரத்தில் கூறும்போது, “சென்னையில் நடைபெற்ற வேறு சில கொள்ளைகளிலும் பக்தாரமிற்கு முக்கியப் பங்கு உள்ளது. இவர் நாதுராமை விட முக்கிய குற்றவாளி ஆவார். இவர்கள் மீது ராஜஸ்தானில் கொள்ளை வழக்கு எதுவும் இல்லை. இதனால் பக்தாரமை தேடுவதில் நாங்கள் தீவிரம் காட்டவில்லை” என்று தெரிவித்தனர்.

கொளத்தூர் கொள்ளை சம்பவத்தில் மற்றொரு முக்கிய குற்றவாளியான தீபாராம் ஜாட் இன்னும் சிக்காமல் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x