என்ன விலை கொடுத்தாலும், பத்மாவத் ரிலீஸை தடுப்போம்: கர்னி சேனா தலைவர் ஆவேசப் பேட்டி

என்ன விலை கொடுத்தாலும், பத்மாவத் ரிலீஸை தடுப்போம்: கர்னி சேனா தலைவர் ஆவேசப் பேட்டி
Updated on
1 min read

என்ன நடந்தாலும், நாங்கள் கைது செய்யப்பட்டாலும் கூட 'பத்மாவத்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம், அதை தடுப்போம் என்று ராஜ்புத் கர்னி சேனா தலைவர் லோகேந்திரா சிங் கல்வி ஆவேசமாக பேட்டி அளித்தார்.

ராணி பத்மினி வரலாற்றைக் தழுவி 'பத்மாவத்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ரன்தீப் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, அந்த திரைப்படத்தை வெளியிட ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதையடுத்து, ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் இந்த திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் படத்தை திரையிட அனுமதித்து. இதையடுத்து குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன.

நாளை (25-ம் தேதி) 'பத்மாவத்' திரைப்படம் நாட்டில் பல்வேறு மாநிலங்களின்  திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ராஜ்புத் கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் கல்வி இன்று ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு ஆவேசமாகப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனவரி 25-ம் தேதி 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகலாம் அல்லது வெளியாகமலும் போகலாம். ஆனால், எங்களைப் பொருத்தவரை 'பத்மாவத்' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம். என்ன விலை கொடுத்தாலும், நாங்கள் கைது செய்யப்பட்டாலும் படத்தை திரையிடுவதை தடுப்போம்.

இந்த பிரச்சினை அனைத்தும் படத்தின் இயக்குநர் பன்சாலியைத் தவிர்த்து வேறு யாரையும் காரணம் கூற முடியாது. ஏற்கெனவே இவரின் 'ராம்லீலா' திரைப்படத்துக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

நாங்கள் எப்போதும் அமைதியாகவே போராட்டம் நடத்த விரும்புகிறோம். ஆனால், பன்சாலியின் பிடிவாத குணத்தால், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் செல்கிறது.

எங்களைப் பொருத்தவரை ராஜஸ்தான், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில்களில் பத்மாவதி திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு லோகேந்திர சிங் கல்வி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in