

போபால்: மத்தியபிரதேசத்தில் 28 எம்எல்ஏக்கள், நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மொத்தம் 230 உறுப்பினர்களை கொண்ட ம.பி. சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக 163 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து ம.பி.யின் புதிய முதல்வராக முதல்முறை எம்எல்ஏவான மோகன் யாதவ் கடந்த 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் ராஜேந்திர சுக்லா, ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தியது.
இதில் பாஜக மூத்த தலைவர்கள் கைலாஷ் விஜய் வர்கியா, பிரகலாத் சிங் படேல் உட்பட கட்சியின் 28 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். தலைநகர் போபாலில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் மங்குபாய் படேல் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த 28 பேரில் 18 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 6 பேர் தனிப் பொறுப்பு அமைச்சர்களாகவும் 4 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். விழாவுக்கு முன் முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, “பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி எனது புதிய அமைச்சரவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும்” என்றார். இந்த அமைச்சரவை விரிவாக்கம் மூலம் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.