Last Updated : 28 Jan, 2018 03:49 PM

 

Published : 28 Jan 2018 03:49 PM
Last Updated : 28 Jan 2018 03:49 PM

பிரதமர் மோடியுடன் வெளிநாடு சென்ற விஐபிக்கள் யார்? : பெயரை வெளியிட சிசிஐ ஆணையர் உத்தரவு

பிரதமர் மோடியின் வெளிநாடு பயணத்தின் போது, உடன் சென்ற விஐபிக்கள் பெயரை வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு தலைமை தகவல் ஆணையர்(சிசிஐ) ஆர்.கே. மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

நீரஜ் சர்மா, அயுப் அலி ஆகியோர் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பிரதமர் வெளிநாடு பயணத்தின் போது உடன் சென்றவர்கள் பட்டியலை கேட்டு பிரதமர் அலுவலகத்தில் மனுச் செய்தனர்.

இதில் நீரஜ் சர்மா கடந்த ஆண்டு ஜூலை மாதம் மனுத் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது உடன்சென்ற தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் யார், உரிமையாளர்கள், பங்குதாரர்கள், விஐபிக்கள் ஆகியோர் பெயரைக் கேட்டு இருந்தார்.

2016ம்ஆண்டு ஏப்ரல் மாதம் அயுப் அலி மனுச் செய்து இருந்தார். அதில், பிரதமர் மோடியின் மாத வீட்டுச் செலவு, அவரை சந்திக்கும் வழிமுறை என்ன, தனது வீட்டில் மக்களை எத்தனை முறை பிரதமர் மோடி சந்திக்கிறார், அரசின் செலவில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு எத்தனை முறை மோடி பயணித்துள்ளார் ஆகியவற்றை கேட்டு இருந்தார்.

இந்த இரு மனுக்களுக்கு முறையாக பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பதில் அளிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துருக்கு இருவரும் மனுச் செய்தனர். அந்த மனுவின் விசாரணை மாத்தூர் முன்னிலையில் நடந்தது.

அப்போது, மனுதாரர் மாத்தூர் பேசுகையில்,” பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணித்தின் போது உடன் சென்ற விஐபிக்கள் பட்டியல் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அளிக்க மறுத்துவிட்டது பிரதமர் அலுவலகம். ஆனால், இதே தகவல்கள் பிரதமர் மன்மோகன் காலத்தின் போது பெறப்பட்டுள்ளது. அது தொடர்பாக இணையதளத்திலும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், “ பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த பட்டியல், இணையதளத்தில் உள்ளது. மற்ற வகையில் எந்த தகவலையும் அளிக்க முடியாது. அதில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால், உடன் சென்ற விஐபிக்கள் பெயரை வெளியிட முடியாது” எனத் தெரிவித்தனர்.

இந்த விளக்கத்தை தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் ஏற்கவில்லை. அதன்பின் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

தகவல் உரிமை ஆணையத்தின் கருத்துப்படி, பிரதமர் மோடியுடனான வெளிநாட்டு பயணத்தின்போது, அரசு பதவி வகிக்காத நபர்கள் உடன் யாரெல்லாம் பயணித்தார்கள் என்கிற பட்டியலையும், பிரதமர் மோடியின் பயணச் செலவு, தேர்தல் பிரசாரச்செலவு உள்ளிட்ட விவரங்களையும் மனுதாரர் இருவருக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x