

உச்ச நீதிமன்றம் நிர்வாகம் சரியில்லை என புகார் கூறிய அதிருப்தி நீதிபதிகள் நால்வரையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்தார்.
வழக்கு விசாரணைகள் தொடங்குவதற்கு முன்னதாக காலை 10.30 மணியளவில் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், குரியன் ஜோசன் ஆகியோரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்தார். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
நேற்றைய முன் தினமும் (செவ்வாய்க்கிழமை) 15 நிமிடங்கள் சந்திப்பு நடந்தது.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசல் விரைவில் தீரும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.
விசாரிக்க மறுப்பு:
இதற்கிடையில், 4 நீதிபதிகள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பது, விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஏற்க மறுத்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை லிஸ்ட் செய்துவுடன் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.