Published : 25 Jan 2018 12:11 PM
Last Updated : 25 Jan 2018 12:11 PM

நாட்டை சங்கடப்படுத்தாதீர்கள் மோடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நேற்றுமுன்தினம் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. 60 நாடுகளின் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகஅதிகாரிகள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பா.ஜனதா கட்சி பெற்ற வெற்றியையும், தனக்கு மக்கள் அளித்த வாக்குகளையும் மிகைப்படுத்தி கூறினார்.

அவர் பேசுகையில், "30 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக, 600 கோடி இந்தியர்கள் (6பில்லியன்) பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சியில் அமரச் செய்து இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 2014ம் ஆண்டு கணக்கின்படி 81.4 கோடி மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. ஆனால், மோடியோ 600 கோடி இந்தியர்கள் தனக்கு வாக்களித்தனர் என்று பேசினார்.

இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படங்களை வெளியிட்டு கருத்துக்களைத் தெரிவித்தது.

அதில் "பிரதமர் மோடி, நீங்கள் சார்ந்திருக்கும் பா.ஜனதா கட்சி 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 31 சதவீதம் மட்டுமே வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால், நீங்களோ 600 கோடி இந்தியர்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தார்கள் என டாவோஸ் மாநாட்டில் பேசியுள்ளீர்கள்.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 121 கோடி மக்கள் மட்டுமே இருக்கிறார்கள், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 81 கோடி மக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் மத்தியில் பேசும் நீங்கள் இந்தியாவை சங்கடப்படுத்துவதையும், தலைகுனிவு ஏற்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ட்விட்டர் பதில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின், பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இருந்தும், பா.ஜனதாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த வாசகங்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

— CPI (M) (@cpimspeak) January 24, 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x