

இந்திய அரசியலுக்கு பாஜக புதிய வடிவம் கொடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது கட்சியின் நிறுவனர் களான ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யா ஆகியோரின் விருப்பம் என அவர் தெரிவித்தார்.
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அத்வானி பேசியதாவது:
பாஜகவுக்கு இரண்டு, மூன்று உபாத்யாக்கள் இருந்தால் இந்திய அரசியலுக்கு புதிய வடிவம் கொடுத்துவிடுவார்கள் என்று முகர்ஜி தெரிவித்தார். அவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை கட்சியினர் மதித்து நடக்க வேண்டும். அவர்கள் விரும்பியபடி இந்திய அரசியலுக்கு புதிய வடிவம் கொடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் குருஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
1951-ல் நடைபெற்ற கான்பூர் கூட்டத்தில் குருஜி மற்றும் முகர்ஜிக்கு இடையே நடைபெற்ற நீண்ட ஆலோசனையின் காரணமாகவே பாரதிய ஜனசங்கம் (பாஜகவின் பழைய பெயர்) உருவானது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் நமது கட்சியினரிடம் எவ்வித மமதையும் இல்லை. இருப்பினும் நரேந்திர மோடியை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரின் போக்கு இன்னும் மாறவில்லை.
முந்தைய ஆளும் கட்சி 44 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. சில மாநிலங்களில் ஓர் இடம் கூட கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கும் பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அமித் ஷாவுக்கும் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.