“நாடு சுதந்திரம் அடைந்தபோதே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்
பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்
Updated on
1 min read

காந்திநகர்: நாடு சுதந்திரம் அடைந்தபோதே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நாடு சுதந்திரம் அடைந்தபோதே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானில் இருந்து பலர் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவத் தொடங்கினார்கள். மும்பை பயங்கரவாத தாக்குதல்தான் இதில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலுக்கு முன்பு வரை மக்கள் குழப்பமான மனநிலையில்தான் இருந்தார்கள்.

தற்போது நாட்டுக்குத் தேவை, பதில் தாக்குதல்கள்தான். இதுதான் தற்போது நாட்டின் எண்ணமாக உள்ளது. யாராவது எல்லைத் தாண்டி ஊடுருவினால் நாம் பதில் தாக்குதல் நடத்த வேண்டும். பயங்கரவாதம் நாட்டுக்கு இன்னமும் குறிப்பிடத்தக்க சவாலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதை முறியடிக்க வேண்டுமானால், தீவிரமான பதில் தாக்குதலை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் உருவானதில் இருந்து அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்குமான உறவு இயல்பு நிலையில் இல்லை. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான நமது கவலைகளை நாம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்திருக்க முடியாது என நாம் கூறி வருகிறோம்.

அமெரிக்காவில் இந்து கோயில் இடிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் வெளிநாடுகள் இடம் கொடுக்கக்கூடாது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள நமது தூதரகம் அந்நாட்டு அரசிடமும் காவல் துறையிடமும் புகார் அளித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in