2024 மக்களவைத் தேர்தல் | காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்

ப.சிதம்பரம் | கோப்புப்படம்
ப.சிதம்பரம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்த காங்கிரஸ் கட்சி அதன் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நியமித்துள்ளது.

16 பேர் கொண்ட குழுவில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் மற்ற முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ தேர்தல் அறிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை உறுப்பினர்கள் ரஞ்ஜீத் ராஜன், இம்ரான் பிரதாப்கர்கி, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, அகில இந்திய தொழில்துறை காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் துறை ஒருங்கிணைப்பாளர் கே.ராஜு ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்த அடுத்த நாளில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும், மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுக்குத் தேவையான இடங்களைக் கொடுத்து, பாஜகவை வீழ்த்த திட்டம் வகுக்கவேண்டும் என்றும் ராகுல் அப்போது கருத்து தெரிவித்தார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க இண்டியா கூட்டணியை வலுவான கூட்டணியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் எடுக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in