Published : 02 Aug 2014 02:47 PM
Last Updated : 02 Aug 2014 02:47 PM

சஹாரன்பூர் கலவரக்காரருடன் முதல்வர் அகிலேஷ் யாதவ் எடுத்த புகைப்படத்தால் உ.பி.யில் சர்ச்சை

சஹரான்பூர் கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நபருடன் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருப்பது போன்ற படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதற்கு உத்தரப் பிரதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூரில் வழிபாட்டுத் தலத்தின் நிலம் தொடர்பான பிரச்சினையில் இரு பிரிவினரிடையே கடந்த சனிக்கிழமை நடந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். போலீஸார் உட்பட 33-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சஹாரன்பூரில் பல இடங்களில் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 38 பேரிடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன், கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிலர் இருப்பது போன்ற புகைப்படம், இந்தி நாளிதழ் ஒன்றின் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டதாக முன் தேதியிடப்பட்டு வெளியானது.

இதனை சமாஜ்வாதி உறுப்பினர் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்ததால், இந்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை, அநத உறுப்பினர் நீக்கி உள்ளார்.

கலவரக்காரர்களுடனான அகிலேஷ் யாதவின் புகைப்படம் உத்திரப்பிரதேச அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "முதல்வரை தினம்தோறும் நிறைய சந்திக்க வருகின்றனர். அவர்களுடம் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டதை சர்ச்சையாக்குவது சரியல்ல.

சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே, சிலரால் இந்த புகைப்படம் கசியவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதி நிலவ வழி செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் முதல் கடமை . மேலும், தற்போது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை யாரேனும் எடுக்க முயன்றால், அது கண்டிக்கத்தக்கது" என்றார்.

முன்னதாக, முசாபர்நகர் கலவரத்திற்கு காரணமானவராக வழக்கு பதிவு செய்யப்பட்டவரான மவுலானா நஸீரை, முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த புகைப்பட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x