மக்களவையில் மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்: பிரதமர் மோடி மீது கார்கே புகார்
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடிஆகியோர் அவையில் விளக்கம் அளிக்கக் கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைகண்டித்து இண்டியா கூட்டணிஎம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய்சவுக் வரை நேற்று பேரணி நடத்தினர்.
இந்த பேரணிக்குப் பின் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ‘‘ நாடாளுமன்ற அத்துமீறல் குறித்துவாராணசி, அகமதாபாத் மற்றும் டி.வி.யில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்’’ என்றார்.
இந்நிலையில் மக்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் சுரேஷ், நகுல் நாத் மற்றும் தீபக் பைஜ் ஆகியோரை சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். இதனால் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 146-ஆக உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிகளவில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
இது குறித்து காங்கிஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘‘கிரிக்கெட் போட்டியில் பீல்டர்களே இல்லாமல் பேட்டிங் செய்வது போல்உள்ளது. அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை அவர்கள் அவையில் தாக்கல் செய்கின்றனர். எந்த விவாதமும், எதிர்ப்பும் இல்லாமல் அவற்றை நிறைவேற்ற ஆளும் கட்சியினர் விரும்புகின்றனர்’’ என்றார்.
