

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இம்மாத இறுதியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறு வனத்தை மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன் கைப்பற்ற உதவியதாக குற்றம் சாட்டப் பட்டது. இதுகுறித்து சிபிஐ கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் டி.அனந்தகிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சன் டைரக்ட் டிவி ஆகிய நிறுவனங்களின் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர போதிய ஆதாரங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, பி.சி.கோஸ், எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘இந்த வழக்கில் மலேசிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. குற்றத்தன்மை குறித்து ஆதாரங்களைக் கேட்டு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர். அவர்களது கடிதத் தில் உள்ள வாசகங்களும் கடுமை யாக உள்ளன’ என்றார்.
“இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாமே?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப் பினர்.
அதற்கு பதிலளித்த கே.கே.வேணுகோபால், “மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மலேசிய அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், இந்தியாவில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், அட்டர்னி ஜெனரல் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.