

'பத்மாவத்' திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் எதிர்ப்பை குறிப்பிட்டு "நாட்டில் நடப்பது ஜனநாயகமா அல்லது குண்டர்கள் ஆட்சியா" என நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கி உத்தரவிட்டது.
ஆனால், குஜராத்திலும், ஹரியாணாவிலும் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.
இந்நிலையில், ஒரு திரைப்படத்துக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றமே படத்தை வெளியிட தடையில்லை எனக் கூறிய பின்னரும் ஒரு திரைப்படத்தை முன்வைத்து சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் சச்சரவுகள் இனிமேல் வரவுள்ள மோசமான நிகழ்வுகளுக்கான அறிகுறியே. யார் இந்த கலகக்காரர்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது இங்கே. ஜனநாயகமா அல்லது குண்டர்கள் ஆட்சியா" எனப் பதிவிட்டுள்ளார்.