“எம்.பி.க்கள் இடைநீக்கம்... மக்களின் நம்பிக்கையை குலைக்கும் நடவடிக்கை” - மாயாவதி

மாயாவதி
மாயாவதி
Updated on
1 min read

லக்னோ: "இரு அவைகளிலும் சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமானதுமான சம்பவமாகும். மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்" என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 பேர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல், மக்களவையில் இருந்து 97 எம்பிகள், மாநிலங்களவையில் இருந்து 46 எம்பிகள் என 143 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று லக்னோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறும்போது, "இரு அவைகளிலும் சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்றத் வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமானதுமான சம்பவமாகும். தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இரு அவைகளிலும் சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசுக்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ நல்ல கிடையாது என்று எங்கள் கட்சி நம்புகிறது. இது நாடாளுமன்ற வரலாற்றில் மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம். இதற்கு யார் காரணம் என்றாலும், இது வருத்தமான மற்றும் துரதிர்ஷ்டமான செயல்தான்.

இந்த நேரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்யும் வைரலான வீடியோவும் பொருத்தமற்றது. சாமானியர்களை உள்ளடக்கிய முக்கியமான மசோதாக்களை எதிர்க்கட்சிகளின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது நல்ல மரபு கிடையாது. நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவது பலனளிக்காது. மாறாக, அனைவரும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவர் மக்களவையில் இருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இடைநீக்கம்செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in