Published : 21 Dec 2023 12:46 PM
Last Updated : 21 Dec 2023 12:46 PM

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்களை எதிர்த்து வழக்கு தொடுக்க இண்டியா கூட்டணி திட்டம்?

இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் | கோப்புப் படம்

புதுடெல்லி: குற்றவியல் மசோதாக்களை எதிர்த்து வழக்கு தொடுக்க இண்டியா கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை மத்திய அரசு தயாரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது அதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக் குழுவின் (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இந்த மசோதாக்களை எதிர்த்து வழக்கு தொடுக்க இண்டியா கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதன்கிழமை கூட்டிய இண்டியா கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், கொடூரமான மூன்று குற்றவியல் மசோதாக்களை எந்த முன் அறிவிப்பும் இன்றி உள்துறை அமைச்சர் மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறார். இந்த மசோதாக்கள் குறித்து சட்ட ஞானம் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க இடம் அளிக்காமல் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை(இன்று) நிறைவேற்றப்பட உள்ளது. இரு அவைகளில் இருந்தும் 144 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி இப்போது உங்களுக்குத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதக்களை எதிர்க்கும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், அதில் உள்ள சில சரத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக காவல்துறையின் ஆட்சிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளன. “இந்த மூன்று குற்றவியல் மசோதாக்கள் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன” என்று காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x