Published : 21 Dec 2023 05:23 AM
Last Updated : 21 Dec 2023 05:23 AM
புதுடெல்லி: ‘‘இந்தி நமது தேசிய மொழி. நம் அனைவருக்கும் அந்த மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று, டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியது சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்படுவது, இண்டியாகூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்வது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்துதலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியில் பேசியுள்ளார். அவர் பேசி முடித்த பிறகு. அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறுமாறு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ்குமார் ஜாவிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. கேட்டுள்ளார்.
ஏனென்றால், கடந்த 3 முறை நடந்த இண்டியா கூட்டணி கூட்டங்களிலும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் பேசியதை அவர்தான் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு மொழிபெயர்த்து பேசியுள்ளார். அந்த அடிப்படையில்தான், மனோஜ்குமார் ஜாவிடம் டி.ஆர்.பாலு கோரினார்.
ஆனால், அதற்குள் இடைமறித்த நிதிஷ்குமார், ‘‘இந்தி நமது தேசிய மொழி. அதனால்தான் இந்துஸ்தான் என்ற பெயரே வந்திருக்கிறது. நம் அனைவருக்கும் அந்த மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட மொழி ஆங்கிலம்’’ என்று டி.ஆர்.பாலுவிடம் ஆவேசமாக கூறிவிட்டு, பேச்சை மொழிபெயர்ப்பு எதுவும் செய்ய வேண்டாம் என்றுமனோஜ்குமார் ஜாவிடம் கூறியதாகவும், இதனால் அங்கு சலசலப்பான சூழல் எழுந்ததை அடுத்து, நிதிஷ்குமாரை தலைவர்கள் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவ்வின் பேச்சைக்கூட யாரும் மொழிபெயர்க்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
வாக்குச்சீட்டு முறைக்கு தலைவர்கள் எதிர்ப்பு: இண்டியா கூட்டணி கூட்டத்தின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி, வாக்கெடுப்புக்கு கொண்டுவந்தது. ஆனால், கூட்டணி கட்சிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்று அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவை பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. இருந்தபோதும், கூட்டணி கட்சி தலைவர்களின் போதிய ஆதரவை காங்கிரஸ் கட்சியால் பெறமுடியவில்லை.
குறிப்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. ‘‘காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப முடியாது’’ என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘‘காகித வாக்குச்சீட்டு முறை சரியானது அல்ல. அதற்கு பதிலாக, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கையை பயன்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கலாம்’’ என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
அதேபோல, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரியும் வாக்குச் சீட்டு சகாப்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT