இந்தியாவில் 9 நாட்களில் இரு மடங்கானது கரோனா பாதிப்பு: மேலும் 20 பேருக்கு ஜேஎன்.1 தொற்று

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ம் தேதி நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 938 ஆக இருந்ததது இது நேற்று முன்தினம் 1,970 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன்.1 வகை கரோனா தொற்று கடந்த சிலநாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் ஒருவரிடமும் கோவாவில் 19 பேரிடமும் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவுவதற்கு புதிய ஜேஎன்.1 வகை திரிபே காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய மருத்துவ கழகத்தின் கரோனா பணிக்குழுவின் துணைத் தலைவர் ராஜீவ் ஜெயதேவன் கூறும்போது, “ஜேஎன்.1 என்பது மேற்கத்திய நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் புதிய திரிபாகும். இந்த நாடுகளில் உள்ள கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு இந்த வகை வைரஸை மிக அதிக அளவில்கண்டறிந்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக சமூகத்தில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதை காணமுடிகிறது” என்றார். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி நாட்டில் புதிதாக 614 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 3 பேர் மரணம்: கடந்த 5 நாட்களுக்கு முன்னர்பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த 64 வயது முதியவர், 76 வயதான முதியவர் மற்றும் 44 வயதான அரசு ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மூவருக்கும் இதய நோய், சுவாச பிரச்சினை இருந்துள்ளது. இவர்கள் எந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்று ஆய்வு நடக்கிறது என்று மாநில சுகாதாரத் துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘பயப்பட வேண்டாம்’: சுகாதார அமைச்சர் மன்சுக் அறிவுரை - கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில்கொண்டு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் மாண்டவியா கூறியதாவது:

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் பீதியடையத் தேவையில்லை. நமது தயார்நிலையில் எவ்வித தளர்வும் இல்லை. பொது சுகாதாரம் என்று வரும்போது எவ்வித அரசியலுக்கும் இடமில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவிகள் அளிக்கும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தயார்நிலையை உறுதி செய்ய ஒவ்வொரு மருத்துவமனையிலும் 3 மாதத்துக்கு ஒரு முறை கரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in