Published : 21 Dec 2023 06:37 AM
Last Updated : 21 Dec 2023 06:37 AM

நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 பேர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளிலும் சேர்த்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனிய காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகைகளையுமம் அவர்கள் கைகளில் வைத்திருந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியதாவது: நாடாளுமன்ற வரலாற்றில், இது நம்பகமற்ற செயல்.ஜனநாயகம் மீது விழுந்த அடி. நாடாளுமன்றத்தில் நம்பகத்தன்மையுடன் செயல்படுவது அமைச்சர்களின் மிக முக்கியமான பொறுப்பு.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை. அவர்கள் இஷ்டப்படி செயல்பட ஆளும் கட்சியினர் விரும்புகின்றனர். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘எதிர்ப்புதெரிவிக்கும் அனைவரையும் இடைநீக்கம் செய்து சர்வாதிகாரத்துடன் செயல்பட ஆளும்கட்சியினர் விரும்புகின்றனர். ஜனநாயக நாட்டில் இது முடியாது. அதனால்தான் நாங்கள் மக்களிடம் செல்கிறோம். எம்.பி.க்களின் இடை நீக்கம் ரத்துசெய்யப்பட்டு, அவையில் விளக்கம் அளிக்கும்வரை, எங்கள் போராட்டம் தொடரும். எனது கடிதத்துக்கு குடியரசுத் துணைத் தலைவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’’ என்றார்.

இண்டியா கூட்டணி எம்.பி.க்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தும்படி உள்துறை செயலாளருக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த, மத்திய ரிசர்வ்போலீஸ் படை தலைமை இயக்குநர் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவை சுமூகமாக நடைபெறவேண்டும் என எதிர்க்கட்சிகள்விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறலுக்குவேலைவாய்ப்பின்மை பிரச்சினைதான் காரணம் என ராகுல் கூறுகிறார். அப்படியென்றால் ராகுல்இதை ஆதரிக்கிறாரா? இதெல்லாம் பொறுப்பற்ற கருத்து. எல்லா விஷயங்களிலும் அவர்கள் அரசியல் செய்ய விரும்புகின்றனர். இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x