

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை நேற்று தொடங்கியதும், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. தாமஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஏ.எம். ஆரிஃப் ஆகியோர், அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை இடைநீக்கம் செய்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதன் மூலம், மக்களவையில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டஎதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.முன்னதாக, 2 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தாக்கல் செய்தார். பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, திமுகவின் கனிமொழி உள்பட 14 எம்.பி.க்கள்கடந்த 14-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்களான சசி தரூர், கார்த்தி சிதம்பரம், உள்பட 18 பேர், திமுக எம்.பி.க்களான எஸ்.ஜெகத்ரட்சகன், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.வேலுசாமி, டி.என்.வி.செந்தில்குமார், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், , ஆம் ஆத்மியின் சுஷீல் குமார் ரிங்கு உள்பட49 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 2 எம்.பி.க்கள்இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
ராஜீவ் காந்தி ஆட்சியில் 63 பேர் சஸ்பெண்ட்: கடந்த 1989-ல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. படுகொலை தொடர்பாக தக்கர் கமிஷனின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இந்திரா காந்தி படுகொலையில் அவரது சிறப்பு உதவியாளர் ஆர்.கே.தவாணுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆர்.கே. தவாண் பின்பு, பிரதமர் ராஜீவ் காந்தி அரசில் இணைந்தார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி, ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 63 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி. சையத் ஷஹாபுதீன் தாமாகவே தன்னை சஸ்பெண்ட் செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதைத் தொடர்ந்து ஜி.எம். பனத்வல்லா, எம்.எஸ்.கில், ஷமிந்தர் உள்ளிட்டோரும் வெளிநடப்புச் செய்தனர்.
இந்நிலையில் மறுநாள் அவைக்கு வந்த எம்.பி.க்கள், தாங்கள் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கோரினர். மேலும் தங்களது இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.