

வாரணாசியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நரேந்திர மோடி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் படுதோல்வி அடைந்தார். வாரணாசி தொகுதியில் அவர் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.
இந்நிலையில், நரேந்திர மோடி தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக அஜய் ராஜ் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பணம் செலவழித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், வேட்புமனுவில் மோடி அவரது மனைவி பற்றிய விபரம், வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான விபரங்களை தெரிவிக்காததால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி வி.கே.சுக்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 5-ல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.