

போலீஸ் காவலில் இறந்துபோன தனது சகோதரருக்காக 770 நாள் போராடிய கேரள இளைஞர் ஸ்ரீஜித்துக்கு போராட்டத்தின் பலன் கிடைத்துள்ளது. ஸ்ரீஜிவ் கொலை வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது.
30 வயதாகும் ஸ்ரீஜித்தின் சகோதரர், போலீஸ் காவலில் இருந்தபோது சித்ரவதை செய்யப்பட்டு இறந்தார். இதனால் திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமை செயலகத்துக்கு முன் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீஜித் போராட்டம் மேற்கொண்டு வந்தார். 770 நாட்களாக அவர் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீஜிவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுநாள்வரை மாநில அரசும் ஸ்ரீஜித்தின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தாலும், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை நிராகரித்து வந்தது. வழக்கின் தன்மை அரிதானதாகவோ, அபூர்வமானதாகவோ இல்லை என காரணம் தெரிவித்தது. மேலும் சில நாட்களுக்கு முன்பு, சிபிஐக்கு வழக்குகளால் அதிக சுமை ஏற்பட்டுள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், ஸ்ரீஜிவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் செயலர் எம்.வி.ஜெயராஜன் சிபிஐ அறிவிப்பாணை நகலை ஸ்ரீஜித்திடம் கொடுத்தார். ஆனால், எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாத ஸ்ரீஜித், சிபிஐ விசாரணையை தொடங்கிய பின்னரே தனது போராட்டத்தைக் கைவிடப்போவதாகக் கூறினார்.
ஸ்ரீஜீவ் இறந்தது எப்படி?
ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ் ஒரு மொபைல் போனை திருடியதாகக் கூறி பாரசால போலீஸ் 2014ஆம் ஆண்டு மே 19 அன்று அவரைக் கைது செய்தது. சிறையில் அவர் விஷம் அருந்திவிட்டார் என்று அடுத்த நாள் ஸ்ரீஜிவ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 அன்று ஸ்ரீஜிவ் காலமானார்.
மாநில போலீஸ் புகார் ஆணையம் இந்த சம்பவத்தை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. ஸ்ரீஜிவ் போலீஸ் காவலில் சித்ரவதைக்குள்ளானார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பரிந்துரையின் பேரில் ஸ்ரீஜிவ்வின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீடுக்கான செலவை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளே ஏற்றுள்ளனர். மேலும் மாநில அரசு அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால் இந்த முடிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்தும், சிபிஐ விசாரணை கோரியுமே ஸ்ரீஜித் இன்றுடன் சேர்த்து 770 நாட்களாகப் போராடி வந்தார்.
ட்விட்டரில் ட்ரெண்டான #JusticeForSreejith:
ஸ்ரீஜித் போராட்டத்துக்கு அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. மலையாள நடிகர்கள் நிவின் பாலி, பார்வதி மேனன் ஆகியோர் ஸ்ரீஜித்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளை பதிவு செய்தனர். ஸ்ரீஜித்தின் போராட்டம் பற்றி #JusticeForSreejith என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டானது.