Last Updated : 20 Dec, 2023 11:09 PM

 

Published : 20 Dec 2023 11:09 PM
Last Updated : 20 Dec 2023 11:09 PM

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவை ரத்து செய்க: எம்.பி டி.ரவிகுமார்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ரவிகுமார் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 1965-ல் மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து இன்று (டிச.20, புதன்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-இன் கீழ் பின்வரும் கோரிக்கையை திமுகவின் எம்பியான டி.ரவிக்குமார் பேசியதாவது: கடந்த பிப்ரவரி 9, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர், ‘உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவேண்டும்’ என கடந்த மே 21, 1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பாக ஒப்புதல் அளிக்கவோ, மறுக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்க அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் எதையும் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மாற்றப்படாவிட்டால் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அலுவல்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 348 (1) குறிப்பிடுகிறது. மேலும், உறுப்பு 348 (2), குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், இந்தி அல்லது வேறு மொழியை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 7, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை மாநில மொழியில் நடத்த அனுமதிக்கிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்கள் ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தமும் இல்லாமல், தங்கள் மாநில மொழிகளைத் தங்கள் உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

எனவே, இந்தப் பின்னணியில், 1965-ம் ஆண்டு அமைச்சரவைக் குழுவின் முடிவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை முறைப்படி அறிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x