புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் முதல் வலுக்கும் ‘மிமிக்ரி’ சர்ச்சை வரை செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.20, 2023 

புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் முதல் வலுக்கும் ‘மிமிக்ரி’ சர்ச்சை வரை செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.20, 2023 
Updated on
3 min read

ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!: 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்குஅர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், கபடியில் பல சாதனைகள் படைத்தவரும், கபடி அணியின் பயிற்சியாளருமான தமிழகத்தைச் சேர்ந்த கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் - மக்களவையில் நிறைவேற்றம்: திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும், அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்கின்றன. ஐபிசி-க்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில், கும்பலாக சேர்ந்து கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் மத்திய குழுவினர் ஆய்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்தக் குழு, பல்வேறு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. மழை பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். மத்திய குழுவினர் தங்கள் ஆய்வு குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளிக்கவுள்ளனர். அந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு 27 டன் உணவு விநியோகம்: “தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டது. மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு என ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கிருந்து உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டரில் ஏற்றி உணவுகள் விநியோகிக்கப்பட்டது. இதுவரை, கிட்டத்தட்ட 27 டன் அளவிலான உணவு மக்களுக்கு விநியோகித்துள்ளோம்” என்று முதல்வர் உடனான ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

நெல்லையில் கிராமங்கள் வாரியாக வெள்ள சேதங்கள் கணக்கெடுப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை”: “ஒரு மாநில அரசு இடர்பாடுகளில் இருக்கும்போது, உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் கோட்பாடு. ஆனால், மத்திய அரசு தங்களுடை எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களை எல்லாம் வஞ்சிக்கிறது. குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

“என்னை அவமதித்தால் சகித்துக்கொள்வேன். ஆனால்...”: “மிமிக்ரி செய்து எம்.பி. ஒருவர் என்னை அவமதிக்கிறார். அதை இன்னொரு எம்.பி. மொபைலில் படம் பிடிக்கிறார். ஜக்தீப் தன்கர் அவமதிக்கப்படுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால், நாட்டின் குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. எனது பதவி அவமதிக்கப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை போல நடித்து மிமிக்ரி செய்த விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டு வருந்தியதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

“குடியரசுத் துணைத் தலைவரை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை”: “ஜக்தீப் தன்கரை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரைக் காயப்படுத்த விரும்பவில்லை. மிமிக்ரி என்பது ஒரு கலை வடிவம். அவர் ஏன் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை” என்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜக்தீப் தன்கரை போல நடித்து மிமிக்ரி செய்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.

ஜக்தீப் தன்கர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” என எதிர் கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத்தில் இருந்து 150 எம்.பிக்களை தூக்கி வெளியே வீசி இருக்கிறார்கள். அது குறித்து ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை என்று ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

“இடைநீக்க உத்தரவை திரும்பப்பெறும் வரை போராட்டம்...”: “அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் இடைநீக்கம் செய்துவிட்டு, சர்வாதிகார ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். ஜனநாயகத்தில் இத நடக்காது. எனவேதான் நாம் மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவியுள்ளார்.

இதனிடையே 141 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ‘ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டு விட்டது’ என்று சாடியுள்ளார்.

இதனிடையே மக்களவையில் இருந்து 95, மாநிலங்களவையில் இருந்து 46 என இடைநீக்கம் செய்யப்பட்ட 141 எம்.பி.க்களும் நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழையக்கூடாது என்று மக்களவை செயலகம் தடை விதித்துள்ளது.

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது: இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் புதன்கிழமை டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in