Published : 20 Dec 2023 02:40 PM
Last Updated : 20 Dec 2023 02:40 PM

புதிதாக 614 பேருக்கு கோவிட் - ‘எச்சரிக்கை தேவை, அச்சம் வேண்டாம்’ என மத்திய அரசு அலர்ட்

கேரளாவில் கரோனா பரவல் அதிகரிப்பு

புதுடெல்லி: கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 614 பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 21-க்கு பின்னர் ஒருநாள் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது, நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,311 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் கரோனாவுக்கு உயிரிழந்திருப்பது கவலையை மேலும் கூட்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் மட்டும் 292 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மாநில மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் புதன்கிழமை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "முழுமையான அரசு அணுகுமுறையுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் நேரம் இது. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாலும், அச்சமடைய வேண்டியது இல்லை.

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருப்பது, கண்காணிப்புகளை அதிகரிப்பது, ஒத்திகைகள் மேற்கொள்வது ஆகியவற்றுடன் நாம் தயார் நிலையில் இருக்கவேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி ஒத்திகைகள் நடத்த வேண்டும். மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் அரசியலுக்கான இடமில்லை" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவில் முதல் ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனை வழங்கியிருந்தது. அதேபோல், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து உத்தராகண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின.

இதனிடையே, புதிய வகை கரோனா வைரஸ் மாதிரியின் பாதிப்பு மென்மையானது முதல் சற்று தீவிரத்தன்மையுடன் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பொதுவாக மேல்சுவாச பிரச்சினை இருக்கின்றது. இந்த பாதிப்பு நான்கு அல்லது ஐந்து நாட்களில் அறிகுறி காட்டத் தொடங்குகிறது. மிகவும் அரிதாக ஜேஎன்.1 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பை பாதிப்பு உண்டாகிறது, இதனால், செரிமானப் பிரச்சினை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும். ஜேஎன்.1 வைரஸினை ‘வெரியன்ட் ஆஃப் இன்டரஸ்ட்’ என்று அழைத்துள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் குறிப்பிட்ட வகை புதிய வைரஸினால் பொது சுகாதாரத்துக்கு அவ்வளவு பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. என்றாலும், இந்த புதிய வகை மாதிரி வைரஸின் பாதிப்பு குறித்து இந்தியாவின் சுகாதாரத் துறை பணியாளர்கள், அதிகாரிகள், வல்லுநர்கள், பொதுமக்களிடம் கவலை உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x