அமெரிக்காவின் கொலை சதி குற்றச்சாட்டு: மவுனம் கலைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி சதி செய்ததாக கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முதல் முறையாக எதிர்வினையாற்றியுள்ள பிரதமர் மோடி, "அந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை யாரவது கொடுத்தால் அதை இந்தியா கண்டிப்பாக ஆராயும்" என்று தெரிவித்துள்ளார்.

தி ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பிரதமர் மோடி கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “எங்கள் நாட்டு குடிமகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்தற்கான ஆதாரத்தை காட்டினால் அதனை ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இது போன்ற சிறிய சம்பவங்கள் உலகின் பெரிய பொருளாதாரம், ஜனநாயகம் கொண்ட இரண்டு நாடுகளின் உறவுகளை சீர்குலைக்க முடியாது. இந்த உறவினை வலுபடுத்த இருநாடுகளிடமும் உறுதியான ஆதரவுகள் உள்ளன. இது முதிர்ச்சியான நிலையான உறவு என்பதின் தெளிவான அறிகுறி” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் தீவிரவாதியும், ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒரு ஆளை கூலிக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டது.

நிகில் மீதான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், “நிகில் குப்தாவும் சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசு அதிகாரியும் மே மாதம் முதல் தொலைப்பேசி வழியாகவும், மின்னணு தொடர்பு மூலமாகவும் பல முறை தகவல்கள் பரிமாறியுள்ளனர். அப்போது சிசி1 கொலைக்கு திட்டமிடுமாறு நிகில் குப்தாவிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலாக குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிசி1-ன் உத்தரவின் படி, குற்றச்செயல்களில் தொடர்பு என தான் நம்பிய ஒருவரை பன்னுனைக் கொலைச் செய்வதற்காக நிகில் குப்தா அமர்த்தியுள்ளார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்டவர் அமெரிக்காவின் போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய தகவலாளி” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ”அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்தவரையில், குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது” எனத் தெரிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in