

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் இந்தி பேச்சை மொழிபெயர்க்குமாறு கூறிய திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆவேசம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டியா கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (டிச.20) நடைபெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பேச்சை முடித்தபோது, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவரது பேச்சின் மொழிபெயர்ப்பை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் கே. ஜாவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று கூட்டங்களிலும் மனோஜ் கே.ஜா மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வந்தார். அந்த வகையில் அவரிடம் நிதிஷ்குமாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது இடைமறித்த நிதிஷ்குமார், “இந்தி நமது தேசியமொழி. எனவே நாம் அனைவரும் அதை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி” என்று ஆவேசமாக பேசியதாகவும், இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிஷிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேச்சும் கூட மொழிபெயர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.