கியான்வாபி மசூதி விவகாரம்: முஸ்லிம் அமைப்புகளின் மனுக்களை நிராகரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்

கியான்வாபி மசூதி விவகாரம்: முஸ்லிம் அமைப்புகளின் மனுக்களை நிராகரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

அலகாபாத்: கியான்வாபி மசூதி வளாகம் ஆய்வு தொடர்பான வழக்கில் முஸ்லிம் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 1991-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வாராணசி நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை மீட்டு தர கோரியும் வாராணசி நீதிமன்றத்தில் கடந்த 1991-ம் ஆண்டு ஆதி விஸ்வேஸ்வர விரஜ்மான் என்ற அமைப்பின் சா்ரபில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமான் இன்டஜமியா மசூதி குழு மற்றும் உ.பி.சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை மனு தாக்கல் செய்தன.

அதில் ‘‘நாடு சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்த மத வழிபாட்டு தலங்களில் மாற்றம் கூடாது, என கடந்த 1991-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’’ என தெரிவிக்கப்பட்டது. கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் முன்னிலையில் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கியான்வாபி மசூதி சர்ச்சை சுதந்திரத்துக்கு முன்பு இருந்து நிலவுகிறது. அதனால் இந்த விவகாரம் வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டத்தின் கீழ் வராது என வாதிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: கடந்த 1991-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. இதற்கு 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டம் தடை விதிக்கவில்லை. மசூதியின் சுற்றுச் சுவரில் முஸ்லிம் மதத்துக்கான அடையாளமோ அல்லது இந்து மதத்துக்கான அடையாளமோ இருக்கலாம். அவற்றை இப்போது தீர்மானிக்க முடியாது. இந்த வழக்கு நாட்டில் உள்ள இரு சமுதாயத்தினரையும் பாதிக்கிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை, வாராணசி நீதிமன்றம் 6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in