Published : 19 Dec 2023 02:09 PM
Last Updated : 19 Dec 2023 02:09 PM

வரலாற்று ‘சம்பவம்’ - நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

மாநிலங்களவையில் இன்று...

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கடந்த 13-ம் தேதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 90-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் பிரதமர் மோடியின் படம் விகாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சபாநாயகர் கண்டித்தார். பதாகைகளை ஏந்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஏற்காததால், அவை கூடிய சிறிது நேரத்துக்குள் அவையை அவர் ஒத்திவைத்தார்.

பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால் அவையை பகல் 12.30க்கு ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடியபோது மீண்டும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சசி தரூர், மணிஷ் திவாரி, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அவை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று: மாநிலங்களவையிலும் காலை முதலே அமளி நிலவியது. இதன் காரணமாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

வரலாற்று ‘சம்பவம்’ - நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால், திங்கள்கிழமை மட்டும் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கடந்த 14-ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத் தொடரில் இத்தனை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது வரலாற்றுச் சம்பவமாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x