“எதிர்க்கட்சிகள் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” - பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: "நமது அரசை தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோள். ஆனால் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசாங்கத்தின் குறிக்கோள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரியும், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத சிங் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். அதன்பிறகு பேசிய அவர், “ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் (democracy and democratic values) நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும்.

ஒரு சில கட்சிகள், ஒரு வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இது ஆபத்தான ஒன்று. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன. இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து அல்லது முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார். அதோடு, “நமது அரசை தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோள். ஆனால் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசாங்கத்தின் குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்பாக பதிலளிக்கும் போது நாகரிகத்தை கடைபிடிக்க பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in